தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய 7 மாவட்டங்களில் புதிய அரசு நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்தக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் புதிதாக 660 மாணவர் சேர்க்கை இடங்கள் கிடைக்கும். மேலும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளிலும் கூடுதல் இடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, பல்வேறு நர்சிங் படிப்புகளில் மொத்தம் 2,585 இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதேபோல், 12 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 இடங்களும், மருந்தியல் படிப்புகளில் 735 இடங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன.
புதிய கல்லூரிகள் மற்றும் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களால் நர்சிங், துணை மருத்துவம் மற்றும் மருந்தியல் துறைகளில் பயில விரும்பும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















