சென்னையில் அடுத்தடுத்து நடந்த கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் ஒரே இரவில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், சினிமா துணை நடிகரான பிரதீப் ராஜ் (30) நேற்று முன்தினம் இரவு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த மறுநாளே அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், பெசன்ட் நகரில் முன்விரோதம் காரணமாக தவெக நிர்வாகி கண்ணன் (45) கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் ‘ஆப்பரேஷன் டிரைவ்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற சோதனையில், பிரபல ரவுடிகள் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மேலும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். குற்றத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு மட்டும் மொத்தம் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





















