தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கடும் கண்டனம் தெரிவித்தார். “நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூற அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்தின் அரசர் அல்ல” எனக் குறிப்பிட்ட நீதிபதி, அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும், அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், பதவிக்கு வந்த பிறகு மட்டும் ஆஜராகாமல் இருக்க முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அமைச்சர் எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்பதைத் தெரிவிக்குமாறு அவரது தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்





















