சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரைப் பிரிந்து வறுமையில் வசித்து வந்த குழந்தையின் தாயால் மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள், குழந்தையை விற்பனை செய்யுமாறு தாயை வற்புறுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் குழந்தையின் தாய், இரு இடைத்தரகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர் என 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை விற்பனை செய்யப்பட்ட பின்னணியில் பெரிய கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையை மீட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்து பாதுகாப்பான பராமரிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















