திரையுலகிலும், அரசியலிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, தனது உழைப்பு, நேர்மை, துணிச்சல், கொடை குணம், மனிதநேயம் ஆகியவற்றால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மாபெரும் மனிதர் “கேப்டன்” விஜயகாந்த் அவர்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டியுள்ளார்.
எளியவர்களின் துயர் துடைப்பதில் எப்போதும் முன்னின்றவர், ஏழை, எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி, தன்னால் இயன்றவரை பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் வாழ்ந்தவர். திரைத்துறையில் உச்சத்தைத் தொட்டபோதும், மக்களோடு மக்களாகப் பழகிய அவரது எளிமையும், அரசியலில் நுழைந்த பின்னர் மக்கள் நலனுக்காக அவர் முன்னெடுத்த பணிகளும் என்றும் நினைவுகூரத்தக்கவை.
தனது ரசிகர்களால் அன்புடன் “கேப்டன்” என அழைக்கப்பட்டு, பின்னர் தேமுதிக தொண்டர்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்ற தலைவராக உயர்ந்தவர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், “பத்ம பூஷன்” விருது பெற்றவருமான மறைந்த அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவரது தன்னலமற்ற சேவைகளையும், மக்கள் மீதான அன்பையும், சமூகப் பணிகளையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
அவர் மறைந்தாலும், அவர் விதைத்த மனிதநேயம், ஏழை எளிய மக்களுக்காக அவர் செய்த உதவிகள், மக்கள் நலனுக்காக அவர் கொண்டிருந்த அக்கறை ஆகியவை என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.
மக்கள் மனங்களில் என்றும் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் வாழ்க!”
அவரது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்கி, அவரது நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.





















