திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் உணவை உட்கொண்ட மாணவர்களில் 17 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உணவு தயாரிக்கப்பட்ட விதம், அதன் தரம் மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்யவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





















