தமிழகத்தில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ சர்க்கரை சுமார் ரூ.67 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை, படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை எட்டியுள்ளது.
சர்க்கரை உற்பத்தி குறைவு, கையிருப்பு சரிவு, கரும்பு விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் சர்க்கரை கையிருப்பு கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக டீ, காபி மற்றும் இனிப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட செலவினம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.





















