தமிழ் திரையுலகில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, செப்டம்பர் 1, 2026 முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நிதி மற்றும் திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 வார ஓடிடி விதிமுறை
திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது தமிழ் திரைப்படங்கள் பொதுவாக திரையரங்கு வெளியீட்டுக்கு சுமார் 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் நடைமுறை உள்ளது.
படப்பிடிப்புகளுக்கும் தடை
மேலும், செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு காரணமாக செப்டம்பர் மாதத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பல திரைப்படங்களின் வெளியீட்டு தேதிகளில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.





















