தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்யும் முறையினை ஏற்கனவே பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
பதிவு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதான சேவையை வழங்கவும் நேரில் வருகையற்ற பதிவு (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இம்முறையில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகிய ஆவணங்களைத் தற்போது பதிவு செய்யலாம். இம்முறையில் ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்க இயலும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகைதர வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.





















