சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 55.72 சவரன் (445.78 கிராம்) எடையுள்ள தங்கக் கிரீடம் மாயமாகி, அதற்குப் பதிலாக அதே வடிவிலான போலி கிரீடம் வைக்கப்பட்டிருப்பது திருவாபரண கணக்கெடுப்பின்போது தெரியவந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தங்கக் கிரீடம் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. அப்போது கிரீடத்தின் எடை 445.78 கிராம் என கோயில் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது பாதுகாப்பு அறையில் காணப்பட்ட போலி கிரீடம் சுமார் 240 கிராம் மட்டுமே எடையுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலை திருவாபரணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின்போதே தங்கக் கிரீடம் தொடர்பான முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிரீடம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், கிரீடம் உண்மையில் திருடப்பட்டதா அல்லது வேறு பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டதா என்பது குறித்து இன்னும் முழுமையான உறுதிப்படுத்தல் வரவில்லை. சபரிமலையில் இல்லையெனில் ஆரன்முலா பாதுகாப்பு அறையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முழுமையான விசாரணை மற்றும் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்குப் பிறகே இறுதி நிலை தெளிவாகும்.





















