நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த 3 நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFBU) இடையே செப்டம்பர் 27 இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை ஆராய IBA மற்றும் UFBU பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவை உடனடியாக அமைக்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இதையடுத்து திட்டமிடப்பட்டிருந்த போராட்ட நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக UFBU அறிவித்துள்ளது.
இதனால் இன்று (செப்.28) முதல் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்; 3 நாள் வேலைநிறுத்தத்தால் ஏற்படவிருந்த வங்கிச் சேவை பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.





















