தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 17-ம் தேதி ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.





















