நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமார்–யூடியூபர் மதுமிதா தம்பதியின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள், 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுமிதா யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன், தங்க நகைகள் மற்றும் பணத்துடன் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் முன்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய குடும்பத்தினர் கொள்ளை நடந்திருப்பதை அறிந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பதிவுகளை வைத்தே கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை கச்சிதமாக திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.





















