மதுரை,
மதுரையில் அஷ்டமி சப்பர வீதியுலா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் நடக்கும் அஷ்டமி சப்பர வீதி உலாவில் சுவாமி- அம்பாள் மதுரை நகரின் வெளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இந்த ஆண்டுக்கான அஷ்டமி சப்பர வீதி உலா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 6.15 மணிக்கு கோயிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் மற்றும் மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியபடி புறப்பட்டனர்.
பின்னர் கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 தேர்களில் சுவாமி- அம்பாள் தனித்தனியாக எழுந்தருளினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பர தேரோட்டத்தை தொடங்கினர். இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
யானைக்கல், விளக்கு தூண் சந்திப்பு, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, தவிட்டு சந்தை, தெற்குவாசல், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, பெரியார் பஸ் நிலையம், ரயில் நிலையம், மேலவெளி வீதி, குட்ஷெட் ரோடு, வக்கீல் புதுத்தெரு வழியாக அஷ்டமி சப்பர தேரோட்டம் நடந்தது.
வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழா தேரோட்டத்துக்கு இணையாக நேற்று நடந்த அஷ்டமி சப்பர வீதிஉலாவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 11 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.


















