சேலம்,
மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீரால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கனமழையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இந்த நிலையில் மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் உள்ள சந்தைதானப்பட்டி ஏரி நிரம்பி உபநீர் வெளியேறியதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.
இதனால் கரும்பு,தக்காளி, கத்தரி,சோளம், ராகி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லாத நிலையிலும் கூட இன்றுவரை விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வழியாததால் பயிர்கள் அழுகி வீணாகி வருகிறது.
இதன் காரணமாக பெரும் வருவாய் இழப்புக்கு ஆளான விவசாயிகள் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு தங்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி உபநீர் வெளியேறும் கால்வாய்களை சீரமைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் புகுந்ததால் அவ்வழியே செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் அவதியுற்று வருகின்றனர்.













