சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
சேலம்,
வாரிசு அரசியல் நிலைநிறுத்தப்பட்டு விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி விட்டது. தி.மு.க.வில் இருந்து இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.
சேலம் மாநகர் மாவட்டம், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் தாதகாப்பட்டி கேட் அருகில், கொண்டலாம்பட்டி பகுதி-1 கழக செயலாளர் எம்.சண்முகம் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கொண்டலாம்பட்டி பகுதி 2 கழக செயலாளர் கே.பி.பாண்டியன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.பி. சரவணன், வட்ட கழக செயலாளர்கள் புல்லட் ஆர்.செந்தில்குமார், எம்.கே.எஸ்.விநாயகம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடியார். முதலமைச்சர் செய்ய வேண்டிய திட்டங்களை எதிர்க்கட்சி தலைவராக இருந்து எடப்பாடியார் செய்து வருகிறார். இன்றைய தினம் கூட டெல்லி சென்றவர் நடந்தாய் வாழி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
கழக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சத வீத உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடியார்.
சமூக நீதிக்காக திமுக ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை. அனைத்து துறைகளிலும் 69 சதவீத இடஒதுக்கீடு தந்தவர் புரட்சித்தலைவி அம்மா. 2011 முன்பு திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகைக்கு 1200 கோடி ரூபாய் தான் வழங்கினார்கள்.
கழக ஆட்சியில் 9 பிரிவுகளுக்கு புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் 4200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது ஒரே உத்தரவில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவிதொகை வழங்க உத்தரவிட்டார்.
கழக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி தந்தார். திமுக வந்தால் 1,500 ரூபாய் ஓய்வூதியம் தருவதாக கூறி விட்டு ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு அனைத்தையும் நிறுத்திவிட்டனர்.
கழகத்தை ஒரு தொண்டன் தான் தலைமை தாங்குவான் என்ற ஜனநாயகத்தை, திமுகவில் கூற முடியுமா? திமுகவில் ஜனநாயகம் இல்லை. வாரிசு அரசியல் நிலைநிறுத்தப்பட்டதால் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளனர்.
கழகத்தை வலிமைப்படுத்தும் செயலில் யார் முட்டுக்கட்டை போட்டாலும், அது ஆண்டவனாக இருந்தாலும் அவரை அடையாளப்படுத்தி தூக்கி எறிவது தான் கழகத்தின் வரலாறு. தன்னை ஒரு கட்சிக்கு தலைவன் என்று கூறிக்கொண்டு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று சென்று வருபவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தேனி தொகுதியில் மட்டுமே பிரச்சாரம் செய்தார்.
அதனால் தென் தமிழகத்தில் ஓரிரு தொகுதிகளில் மட்டும் தான் வெற்றிபெற முடிந்தது. அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வெற்றிபெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியிலேயே தோற்றபோது ஓபிஎஸ் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
கழக ஆட்சியில் சிறந்த காவல்துறையாக இருந்த தமிழக காவல்துறை, தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு ஆகி விட்டது. திமுகவை விமர்சித்தால் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி சந்திப்போம்.
கழகம் மனித புனிதரால் தொடங்கப்பட்ட, தெய்வசக்தி பெற்ற இயக்கம். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மா, எடப்பாடியாரை வழிநடத்துகிறது. திமுகவிடம் இருந்து கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடியாரால் தான் முடியும்.
மத்திய அரசிடம் இருந்து எத்தனை அழுத்தம் இருந்தாலும் மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்களுக்கு சுமை திணிக்கக்கூடாது என்று எடப்பாடியார் கவனமுடன் இருந்தார். இனி சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் இரட்டை இலை தான் வெற்றி பெறும்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.


















