விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கண்டனம்
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் அதிநவீன படகு சேவை கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை கிடப்பில் போடுவதா என்று விடியா திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவற்கு வசதியாக ஏற்கனவே பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை, எம்.எல்.விவேகானந்தர் ஆகிய படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தினை பார்வையிடுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்ற 3 படகுகளும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான வசதியின்றி இயங்கி வருகின்ற காரணத்தினால் கழக ஆட்சி காலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன இரண்டு படகுகள் வாங்கப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அதிநவீன படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு பயன்படுத்தப்படாமலேயே விடியா தி.மு.க ஆட்சியில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூ.8 கோடி செலவில் வாங்கப்பட்ட இப்படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை நான் பலமுறை அரசை வலியுறுத்தியுள்ளேன்.
குறிப்பாக இது தொடர்பாக 11-03-2022 அன்று சென்னை நந்தனத்தில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரை தொடர்பு கொண்டு கழக ஆட்சியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுமார் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் இரண்டு அதி நவீன குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் கூடிய தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய படகுகள் புதிதாக வாங்கப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்படகுகள் இதுவரை சுற்றுலா பயணிகளுக்கு பயன்படுத்தாத நிலை தான் தொடர்கிறது. இந்நிலையை மாற்றி சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்த இரண்டு புதிய அதிநவீன வசதிகளுடன் கூடிய படகினை இயக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தேன்.
மேலும் இது தொடர்பாக 04-05-2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தெடரில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கன்னியாகுமரியில் நவீன படகுகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
இதற்கு நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து கூறுகையில் கொரோனா பரவல் காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக குறைந்து விட்டது என்றும், வருமானமும் ரூ.12 கோடியிலிருந்து ரூ. 3.2 கோடியாக குறைந்திருக்கிறது என்றும் மேலும் படகு நிறுவதற்காக இடம் இல்லை. இதனால் எம்.எல்.தாமிரபரணி, எம்.எல்.திருவள்ளுவர் என்று பெயரிடப்பட்ட இரண்டு படகுகளையும் பயன்படுத்த இயலவில்லை.
அந்த இரண்டு படகுகளையும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படகுகளை இயக்குவது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலமாகவோ, சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாகவோ இயக்குவதற்கு பணிகளை முடுக்கி விட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆய்வு நடத்தி கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகள் கடலில் நீண்டதூரம் பயணம் செய்வதற்கு எம்.எல்.தாமிரபரணி, எம்.எல்.திருவள்ளுவர் ஆகிய இரண்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய இப்படகுகள் நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ 8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன இரண்டு படகுகளும் இயக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
04-05-2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தெடரில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இந்த இரண்டு படகுகளும் இயங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்டும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை.
எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வழங்கப்பட்ட இந்த இரண்டு அதிநவீன படகுகளும் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது என்ற காரணத்தினை கருத்தில் கொண்டு, தி.மு.க அரசு எம்.எல்.தாமிரபரணி, எம்.எல்.திருவள்ளுவர் ஆகிய குளிர்சாதன வசதியுடன் கூடிய இப்படகுகளை இயக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.
எனவே சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அறிவித்தது போன்று, இந்த இரண்டு அதிநவீன படகுகளையும் கன்னியாகுமரி சுற்றுலா தலத்திற்கு வருகின்ற இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகின்ற சுற்றுலா பயணிகள் பயன்பெறும் விதத்தில் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன படகுகளை உடனடியாக இயக்கிட வேண்டும். சுற்றுலா பயணிகள் பயனடைந்திட வேண்டும். கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி அடைவதற்கு இந்த படகு சேவை ஒரு மைல் கல்லாக அமையும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கூறி உள்ளார்.













