மதுரை
இளம் வாக்காளர்கள் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசை தான் விரும்புகிறார்கள் என்றும், எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும், தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டபம் மேற்கு ஒன்றியம் மற்றும், திருப்புல்லாணி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் கழக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ரத்தினம், மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மருதுபாண்டியன், திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர் கருப்பையா, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாணவரணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றியம் திருப்புல்லாணி ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதன்பின்னர் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுகவில் வாரிசு அரசியல் மேலோங்கி விட்டது. அது மட்டுமல்ல உதயநிதிக்கு எப்படியாவது மகுடம் சூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு ஏற்றார்போல் அமைச்சர்களும் ஊதுகுழலாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த இயக்கத்தில் வாரிசு அரசியல் கிடையாது. இன்றைக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடியார், அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்து இந்த இயக்கத்தை வழி நடத்தும் உயர்ந்த பொறுப்பில் உள்ளார்.
இன்றைக்கு திமுக.வின் வாரிசு அரசியலை கண்டு ஒட்டுமொத்த இளைஞர்கள் கொதித்துப்போய் இருக்கின்றனர். இன்றைக்கு வளரும் இளம்தலைமுறையினர், எடப்பாடியார் தலைமையிலான இந்த இயக்கத்தை தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் மாணவர் நலனை கருத்தில் கொண்டு, ஆல்பாஸ் அறிவித்தார் எடப்பாடியார். அதனால் தான் அவரை ஆல்பாஸ் முதல்வர் என்று இளைஞர்கள், மாணவர்கள் பாராட்டினார்கள்.
இந்த இயக்கத்தை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திமுகவுடன் மறைமுக தொடர்பு வைத்துள்ள ஓபிஎஸ், கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது மகன் மூலம் கழக நிர்வாகிகளை விலை பேசினார்.
ஆனால் எந்த தொண்டர்களும் ஓபிஎஸ் பின்னால் செல்லவில்லை. இந்த இயக்கத்தை காப்பாற்ற எடப்பாடியாரால் மட்டுமே முடியும் என்று கழகத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு எடப்பாடியார் பக்கம் நின்றார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில், மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளை பெற்றுத்தான் தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால் இன்றைக்கு வாக்களித்த மக்களுக்கு சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு , பால் விலை உயர்வு, கட்டுமான பொருள் உயர்வு என்று விலைவாசி உயர்வை தான் மக்களுக்கு பரிசளித்து இருக்கிறது தி.மு.க.
மக்கள் விரோத விடியா திமுக அரசு எப்போது வீட்டுக்குப்போகும் என்று மக்கள் நாட்களை எண்ணி கொண்டிருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும், எடப்பாடியார் தலைமையிலான, இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெறும், திமுக படுதோல்வியை சந்திக்கும்.
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.













