திருப்பூர்,
டிசம்பர் 11-ம்தேதி அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி குண்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாரை வரவேற்க தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் பேசினார்.
திருப்பூர் மாவட்டம் குண்டடத்திற்கு வருகை தர உள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் குண்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பி.கே.ராஜ், மாநில அம்மா பேரவை துணை செயலாளர்எம்.கே.முத்துவெங்கடேஷ்வரன், மாவட்ட கழக இணை செயலாளர் பி.சத்தியபாமா, மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அ.இ.அதிமுகவை தோற்றுவித்து வளர்ப்பதற்காக அரும்பாடுபட்டார். ஒவ்வொரு கிராமங்களுக்கும் இரவு பகல் பாராது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த கட்சியை வளர்த்தார். அவருக்கு பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த கழகத்தை மாற்றினார்.
அம்மா அவர்கள் தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும் போது, துளி கூட ஓய்வில்லாமல் இரவெல்லாம் நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசி பெரும் எழுச்சியை உருவாக்கினார். அவர்கள் இருவருக்கும் மக்கள் மாபெரும் ஆதரவு அளித்தார்கள்.
அதேபோல இப்போது கழக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருக்கிற மக்கள் தலைவர் எடப்பாடியாருக்கு ஆதரவு பெருகி வருகிறது. கழகத்தில் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு எடப்பாடியாரின் மக்கள் சக்தியை நிரூபித்தார்கள்.
கழகத்துக்கு புத்துணர்ச்சியை தந்து இருக்கிற எடப்பாடியார் வருகிற டிசம்பர் 11-ம்தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி குண்டடத்திற்கு வருகை தருகிறார். அப்போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டு எடப்பாடியாரை வரவேற்க வேண்டும்.
இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக வருகை தரும் எடப்பாடியாருக்கு தமிழகமே வியக்கும்வகையில் வரவேற்பு அளிக்க வேண்டும். வழியெல்லாம் கொடி, தோரணங்கள் கட்டி, ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நமது கொங்கு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் மொடா மேளம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி எடப்பாடியாருக்கு கோலாகல வரவேற்பு அளிக்க வேண்டும். வரவேற்பு நிகழ்ச்சியல் ஒவ்வொரு கழக தொண்டனும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.













