சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்றும் நாளையும் (அக்டோபர் 22, 23) பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் சில அண்மையில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து, உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பறவைகளுக்கு H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அக்டோபர் 3 முதல் 9ஆம் தேதி வரை மொத்தம் 7 நீர்வாழ் பறவைகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பூங்காவில் பறவைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், கூண்டுகளைச் சுத்தப்படுத்துதல் மற்றும் உயிரிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அக்டோபர் 9ஆம் தேதிக்குப் பிறகு பறவைகள் உயிரிழப்போ, புதிதாக நோய் அறிகுறிகளோ கண்டறியப்படவில்லை எனப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களுக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.





















