சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இரண்டாவது குளிர்சாதன (ஏசி) மின்சார ரயில் சேவை நாளை (அக்டோபர் 23) முதல் தொடங்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த 2025 ஏப்ரல் மாதம் முதல் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தச் சேவைக்கு பயணிகளிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்திலும் ஏசி ரயில் சேவையை அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 23 முதல் டிசம்பர் 24 வரை சோதனை அடிப்படையில் இந்த ரயில் இயக்கப்படும். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் மட்டுமே சேவை வழங்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் 12 குளிர்சாதனப் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள், அகலமான ஜன்னல்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5,000 பயணிகள் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.





















