தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் அக்டோபர் 26ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 23ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
தாய்லாந்து வளைகுடா மற்றும் மியான்மர் அருகே நிலவும் வளிமண்டல சுழற்சி, வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து, அக்டோபர் 23ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




















