காவலர் வீரவணக்க நாளையொட்டி, நாட்டின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறை வீரர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த காவல்துறை வீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடமையையே உயிர்மூச்சாகக் கொண்டு, பொதுமக்களின் நலனுக்காகத் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் காவலர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இரவு பகல் பாராமல் பணியாற்றும் காவல்துறையினரின் சேவையை நினைவுகூரும் வகையில் எடப்பாடி பழனிசாமி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்




















