தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மழைக்காலங்களில் மின்விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
கனமழை, பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் காரணமாக மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகள் சேதமடைய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:
1. மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின்பகிர்மானப் பெட்டிகளின் அருகில் செல்லக்கூடாது.
2. அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடவோ, அவற்றை அகற்ற முயற்சிக்கவோ கூடாது. உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
3. ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
4. இடி, மின்னலின்போது மரங்கள் மற்றும் மின்கம்பங்களின் கீழ் நிற்காமல் பாதுகாப்பான கட்டிடங்களில் தஞ்சமடைய வேண்டும்.
5. மின்கம்பிகளில் விழுந்துள்ள மரக்கிளைகளை பொதுமக்கள் தாங்களாகவே அகற்ற முயற்சிக்கக்கூடாது.
6. மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை உலர்த்துதல் மற்றும் விளம்பரப் பலகைகளை அமைத்தல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
7. வீடுகளில் மின்கசிவு தடுப்புக் கருவியான RCCB பொருத்தி, மின் இணைப்புகளை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.
8. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.




















