தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திராவின் கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு, வடகிழக்கு திசைகளில் வீசும் ஈரப்பதமான காற்று காரணமாக மழைப்பொழிவு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
இன்று நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, தென்காசி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்த நிலையில், இன்று அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில வாரங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைக் கவனித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.





















