நாடு முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி முதல் செல்போன்களுக்கு வரும் அழைப்புகளில், அழைப்பவரின் தொலைபேசி எண்ணுடன் அவரது பெயரையும் திரையில் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய தொலைத்தொடர்புத் துறை பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஒருவரது செல்போனில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும், அந்த எண்ணுக்குரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர் திரையில் காண்பிக்கப்படும். ஏற்கெனவே தொடர்பு பட்டியலில் எண் சேமிக்கப்பட்டிருந்தால், அதில் உள்ள பெயரே முதன்மையாகக் காட்டப்படும்.
இந்த வசதியை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என அக்டோபர் 13ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 4ஜி மற்றும் 5ஜி சேவைகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.





















