தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2025–26 நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், ஊழியர்களுக்கு உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ் (PLB) வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 11.41 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதற்காக மத்திய அரசு மொத்தம் ரூ.2,009.61 கோடி ஒதுக்கியுள்ளது.
தகுதியுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் அதிகபட்சமாக ரூ.17,951 வரை போனஸ் வழங்கப்படும். ரெயில் ஓட்டுநர்கள், நிலைய அதிகாரிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள், தண்டவாளப் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட அரசிதழ் பதிவு பெறாத பல்வேறு பிரிவு ஊழியர்கள் இந்தப் போனஸைப் பெறத் தகுதியுடையவர்கள்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரெயில்வே ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















