ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சில பயணிகள் தங்களது செல்போன்களில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்கள் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, இரவு நேரங்களில் ஓய்வெடுக்கும் பயணிகளுக்கு இதுபோன்ற செயல்கள் பெரும் தொந்தரவை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
6 மாத சிறைத் தண்டனை :
இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில்வே அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறித் தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















