ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இதனால் வழக்கமான ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவாக நிரம்பிவிடுகின்றன.
இந்த நிலையில், ஆயுத பூஜை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை சென்ட்ரல் – கோவை போத்தனூர் இடையே அக்டோபர் 16 மற்றும் 18ஆம் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் அக்டோபர் 17 மற்றும் 20ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு அக்டோபர் 19ஆம் தேதி இரவு 11.55 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு அக்டோபர் 20ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஈரோடு – திருநெல்வேலி, திருநெல்வேலி – தாம்பரம் மற்றும் சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையேயும் சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 10 சிறப்பு ரயில் சேவைகளுக்கான முன்பதிவு அக்டோபர் 15ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















