தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பு போட்டியிடும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார் .
இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் இந்த அமைப்பு எந்தெந்த பகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள், பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுமா என்பன குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு எப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தினாலும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் களமிறங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களை மையப்படுத்திய அரசியலை முன்னெடுத்து, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை விளக்கினார்.
ஏற்கெனவே ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அவரது அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.





















