தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விளையாட்டுத் திறன்களை வளர்க்கவும் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி வகுப்புகள் மூலம் மாணவர்களின் உடல் வலிமை, மனநலம், ஒழுக்கம், குழுவாகச் செயல்படும் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 13) திருத்தப்பட்ட புதிய பள்ளிக் கால அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், 1 முதல் 10ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி கட்டாயமாகவும், கூடுதலாக 2 நாட்களில் பிற செயல்பாடுகளுக்கான நேரத்தை விருப்பத்தின்பேரில் உடற்கல்விக்குப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், உடற்கல்வி வகுப்புகளை மற்ற பாடங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும், பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதான வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.





















