தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில், அதாவது அக்டோபர் 15ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 2 முதல் 3 நாட்களில் முழுமையாக விலகுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (அக்டோபர் 13) தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!
அக்டோபர் 15ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழகக் கடலோர மாவட்டங்களில் பருவமழை தொடங்கியதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய மழைக்காலமான வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும். இந்த ஆண்டு தென்னிந்தியாவில் ஒட்டுமொத்தமாக இயல்பான அளவில் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துள்ளது





















