பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஜனநாயக முறையில் தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயன்ற மருத்துவப் பணியாளர்களை வீட்டுக் காவலில் வைத்ததும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததும் மனித உரிமை மீறல் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விவசாயிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மின்சாரத்துறை ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது உரிமைகளுக்காகப் போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து மக்களுக்குமான அரசு என முதலமைச்சர் விஜய் கூறுவது குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.
“மக்களின் குரலைக் கேட்பதுதான் மக்களாட்சி; அவர்களின் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், போராட்ட நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைப்பதும், காவல்துறையைக் கொண்டு போராட்டங்களை ஒடுக்குவதும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவப் பணியாளர்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.மருத்துவப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசும் மருத்துவத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.





















