பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மருத்துவப் பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.ஆனால், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர முயன்ற போராட்ட நிர்வாகிகள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை ராஜரத்தினம் மைதானம் அருகே சாலையில் அமர்ந்து மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி, காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
தற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





















