சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 11) தொடங்கி வைக்கிறார்.
சுமார் ரூ.4,900 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் 14.64 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் முதற்கட்டமாக 11 ரயில் நிலையங்கள் பயணிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
நாளை காலை 11.30 மணியளவில் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு திரும்புகிறார். தொடர்ந்து பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய மெட்ரோ வழித்தடத்தைத் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளார்.
புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்களை 10 நிமிட இடைவெளியில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் பூந்தமல்லி, போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பொதுமக்களின் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















