பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 11) சென்னை வருவதையொட்டி, நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சீரான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை வணிக மற்றும் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள்:
- ஜி.எஸ்.டி. சாலை: தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பு வழியாக குன்றத்தூர் சாலைக்கும், பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் விமான நிலையச் சந்திப்பில் தாம்பரம் நோக்கியும் திருப்பிவிடப்படும்.
- 100 அடி சாலை: கோயம்பேட்டிலிருந்து வரும் வாகனங்கள் அசோக் நகர் இரண்டாவது அவென்யூ வழியாகவும், அசோக் பில்லரிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் சந்திப்பு வழியாகவும் திருப்பிவிடப்படும்.
- மவுண்ட் – பூந்தமல்லி சாலை: போரூர் சுங்கச்சாவடி மற்றும் ராமாபுரம் சந்திப்புகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்படும்.
- சர்தார் படேல் சாலை: காந்தி மண்டபம் சந்திப்பில் வாகனங்கள் சிபெட் நோக்கித் திருப்பிவிடப்படும்.
- வேளச்சேரி பிரதான சாலை: குருநானக் சந்திப்பில் வாகனங்கள் வேளச்சேரி நோக்கித் திருப்பிவிடப்படும்.
- அண்ணா சாலை: எம்.சி. ராஜா யு-டர்ன் பகுதியில் வாகனங்கள் மீண்டும் அண்ணா சாலை நோக்கித் திருப்பிவிடப்படும்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்: போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும் நேரங்களில் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும், பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















