தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் ரூ.603 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025–2026ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.603.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரும்பு டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ.4,000 கிடைக்கும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 90 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதியுள்ள விவசாயிகளின் கரும்பு விநியோக விவரங்கள், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்குத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
வரும் தீபாவளிப் பண்டிகை முதல் ஊக்கத்தொகை வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















