தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை ரயில்வே நிர்வாகம் அகற்றியுள்ளது.
தமிழகத்தில் ரயில் நிலையங்களில் மொழிப் பயன்பாடு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.21.17 கோடி மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இரண்டாவது நுழைவு வாயிலில் பெரிய கோயில் கோபுர வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு, அதன் முன்பாக இந்தி மொழிக்கு பிரதான இடம் அளிக்கும் வகையில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்டோபர் 7ஆம் தேதி இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினர் ரயில் நிலையம் முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ரயில் நிலைய மேலாளர், இந்தி எழுத்துகளை அகற்றி தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
`





















