தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால அடிப்படையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) டெண்டர் வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ டெண்டர் பதிவின்படி, இது 2026-27ஆம் ஆண்டுக்கான குறுகியகால மின் கொள்முதல் நடவடிக்கையாகும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் தேவை அதிகரிப்பதால், தேவைக்கும் கிடைக்கும் மின்சாரத்திற்கும் இடையிலான பற்றாக்குறையை ஈடுசெய்ய வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, அக்டோபர் 12 முதல் 31-ஆம் தேதி வரை மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 3,000 மெகாவாட், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை 1,500 மெகாவாட் என மொத்தம் 4,500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உச்ச நேர மின் தேவை சுமார் 3,000 மெகாவாட் அதிகரித்துள்ளதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட மின்சாரம் முழுமையாக கிடைக்காததும் இந்த குறுகியகால கொள்முதல் முடிவுக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ டெண்டர் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 9 நண்பகல் 12 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டு, அன்று பிற்பகல் 1 மணிக்கு டெண்டர் திறக்கப்பட உள்ளது.





















