தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதிகளை விரிவுபடுத்தி, முதற்கட்டமாக 500 அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சிறுநீரக நோய் மற்றும் செயலிழப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய அளவில் சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு 3.20 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 4.30 சதவீதமாக இருப்பதாக ஆய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
சிறுநீரக செயலிழப்பின் தீவிரத்தைப் பொறுத்து நோயாளிகள் வாரத்திற்கு பலமுறை டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி கிடைக்காதபோது தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. அங்கு ஒரு டயாலிசிஸ் அமர்வுக்கு ரூ.2,000 வரை செலவாகலாம் என்றும், இதனால் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவு ஏற்பட்டு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையான பொருளாதாரச் சுமைக்கு ஆளாவதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் 36, மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் 37, வட்ட மருத்துவமனைகள் 199, வட்டம் சாராத மருத்துவமனைகள் 59 மற்றும் நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் 39 ஆகியவற்றில் டயாலிசிஸ் சேவையை உறுதி செய்தால் மையங்களின் எண்ணிக்கையை 370 ஆக உயர்த்த முடியும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
சிறுநீரக நோயாளிகளின் மருத்துவச் செலவைக் குறைத்து, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே இலவச சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் டயாலிசிஸ் கட்டமைப்பை தமிழக அரசு விரைவாக விரிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.





















