ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் சீன அணியை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வீராங்கனைகளின் விடாமுயற்சி, சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் களத்தில் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்திறன் இந்த மகத்தான வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி நேரடியாகத் தகுதி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமிதம் கொள்ளச் செய்துள்ள வீராங்கனைகள், தொடர்ந்து பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்தியுள்ளார்.





















