6 மாத உழைப்பில் உருவான யாழி!
இசை ரசிகர்களை கவரும் வகையில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிறுவனமான அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் சார்பில் புதிய வீடியோ இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. ‘அன்னக்கிளியே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சுயாதீன இசை ஆல்பம், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஸ்மித் ஆஷர் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தீக் ஷிதா எழுதி பாடியுள்ளார். அவருடன் ஸ்மித் ஆஷரும் இணைந்து பாடியிருக்கிறார். பாடலின் காட்சிகளில் பவன் அலெக்ஸ், பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் நடித்துள்ளனர். விக்கி பப் இந்த வீடியோவை இயக்கியுள்ளார். ஜே. சரோலா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், தீஜோ பரத்வாஜ் தயாரித்துள்ளார்.
இந்த ஆல்பத்தின் முக்கிய சிறப்பம்சமாக, பாரம்பரியத்துடன் தொடர்புடைய யாழி உருவம் நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பறவை மற்றும் விலங்குகளின் அம்சங்களை கொண்டதாகக் கருதப்படும் யாழியை, இன்றைய தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாக வீடியோவில் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்காக யாழி கதாபாத்திரத்தை உருவாக்குவதில் மட்டும் சுமார் 6 மாதங்கள் உழைத்துள்ளனர். அதன் தோற்றம், வடிவமைப்பு மற்றும் காட்சியமைப்புகளில் சிறப்பு கவனம் செலுத்தி, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதனை உருவாக்கியுள்ளனர். இதனால் பாடலின் காட்சிகளுக்கு வித்தியாசமான தோற்றம் கிடைத்துள்ளது.
பாடலின் இசை, காட்சியமைப்பு மற்றும் கிராபிக்ஸ் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் வகையில் வீடியோ ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பழமையான யாழி உருவத்தை நவீன தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப காட்சிப்படுத்தியிருப்பது இந்தப் பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த வீடியோ ஆல்பத்தை அனிருத் தனது பிரத்யேக யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியானது முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால், ‘அன்னக்கிளியே’ வீடியோ ஆல்பம் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.





















