பெண் செய்தி வாசிப்பாளர் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் செப்டம்பர் 29 அன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் செய்தி வாசிப்பாளரும் வழக்கறிஞருமான மகாலட்சுமி, கடந்த 2013-ஆம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக புகார் அளித்திருந்தார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சவுக்கு இணையதளத்தில் அவதூறான தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும், தன்னை மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
விசாரணையில் சவுக்கு சங்கர் தரப்பு, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி சிவசக்தி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சவுக்கு சங்கரை குற்றவாளி என அறிவித்தார். IPC 509 மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.





















