ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (செப்.30) அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது கிடைத்துள்ள முடிவுகளின்படி, ஒரே நாளில் இந்தியா 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
இதில் வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் மட்டும் இந்தியா 3 தங்கங்களை அள்ளியுள்ளது. மகளிர் அணிப் பிரிவில் ஜோதி சுரேகா வென்னம், சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் சீனாவை 238-234 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
தொடர்ந்து கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் சாஹில் ஜாதவ் – சிகிதா தனிபார்த்தி ஜோடி தென் கொரியாவை 158-157 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
ஆடவர் காம்பவுண்ட் அணிப் பிரிவிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. சாஹில் ஜாதவ், கணேஷ் மணிரத்னம், குஷால் தலால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் சீனாவை 238-237 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதன்மூலம் இன்று வில்வித்தையில் மட்டும் இந்தியா தங்கத்தில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது.
இதற்கிடையே துப்பாக்கிச் சுடுதலின் டிராப் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா – கைனன் செனாய் ஜோடி தங்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 34 புள்ளிகள் பெற்று ஆசிய விளையாட்டு சாதனையையும் படைத்தது.
இதன் மூலம் இன்று மட்டும் வில்வித்தையில் 3 + துப்பாக்கிச் சுடுதலில் 1 என மொத்தம் 4 தங்கப் பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. சமீபத்திய பதக்க நிலவரப்படி இந்தியா 10 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை பெற்றுள்ளது.





















