மேகமலை மற்றும் வருசநாடு சுற்றுவட்டார வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடமலைக்குண்டுவில் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேகமலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 26 முதல் கடமலைக்குண்டு பேருந்து நிலையம் அருகே குடும்பங்களுடன் காத்திருப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு, பகலாக அங்கேயே தங்கி போராட்டத்தைத் தொடர்ந்தனர். மேகமலை சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றன. கடமலைக்குண்டு பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.
மேகமலை, மாஞ்சோலை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உரிமைகளை வன உரிமைச் சட்டத்தின் கீழ் பரிசீலிக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அதேசமயம், பட்டா இல்லாத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின்போது, உண்மையாக வனத்தை நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதற்காக வெளியிலிருந்து வந்தவர்கள் வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையடுத்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டத்தை மலைவாழ் மக்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மலை கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















