கடந்த வாரம் திரைக்கு வந்த ‘டோரதி’ திரைப்படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், படத்துக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது வாழ்வின் யதார்த்தத்தை இப்படம் வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
திருநர் சமூகத்தினர் குழந்தைப் பருவம் முதல் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை ‘டோரதி’ வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். படத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு எதிர்மறையான விமர்சனங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து திருநங்கையான கலைமாமணி சுதா கூறியதாவது:
“திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைப் பருவம் முதலே பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறோம். அந்த அனுபவங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ‘டோரதி’ உருவாகியுள்ளது. ஓர் அமைப்பாக எங்களால் இந்தச் செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்ல முடியாது. ஆனால், இந்தப் படம் அதைச் செய்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாலினத்துக்கும் பாலியல் விருப்பத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது. இதுகுறித்த புரிதல் சமூகத்தில் இன்னும் போதிய அளவில் இல்லை. எனவே, பாலினக் கல்வி குறித்த விழிப்புணர்வு அவசியம்” என்றார்.
திருநங்கையான மேக்னா கூறுகையில், “சமூகத்துக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதற்காக எனது உண்மையான அடையாளத்தை சுமார் 15 ஆண்டுகள் மறைத்து வாழ்ந்தேன். எங்களைப் போன்றவர்களின் உண்மை நிலையை இந்தப் படம் வெளிப்படுத்தியுள்ளது. படத்தின் நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.
‘டோரதி’ படக்குழு
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது படமாக உருவாகியுள்ள ‘டோரதி’யில் கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து, கார்த்திக் சுப்புராஜ் தனது தம்மம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார். தினேஷ் சுப்புராயன் சண்டைப் பயிற்சியை கவனித்துள்ளார். கடந்த செப்டம்பர் 25-ந் தேதி வெளியான இப்படம் குறித்து திருநங்கைகள் தெரிவித்துள்ள ஆதரவுக் கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.





















