தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (செப். 28) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க மோதிரம் வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். 2026 ஜூன் 22 அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகள் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக சுமார் 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தில் பிறந்த 25 குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் தங்க மோதிரங்களை அணிவித்து தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கும் சென்று குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தார்.





















