திருவண்ணாமலை: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையையே சிவனாகக் கருதி வழிபடும் பக்தர்கள், மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில் பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்வது வழக்கம். புரட்டாசி மாத பவுர்ணமி நேற்று (செப்.25) இரவு 11.06 மணியளவில் தொடங்கியதை தொடர்ந்து, இரவு 7 மணிக்குப் பிறகே பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கார், வேன், பேருந்து, ரயில் மற்றும் இருசக்கர வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வந்தனர். இரவு முழுவதும் கிரிவலப் பாதையில் பக்தர்கள் தொடர்ந்து சென்ற நிலையில், பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
பவுர்ணமி இன்று (செப்.26) இரவு 10.44 மணி வரை இருப்பதால் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். கூட்டத்தை முன்னிட்டு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





















