சென்னை:
தமிழ்நாட்டில் மின் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் காலதாமதத்தைக் குறைக்கும் வகையில், தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களை ஈடுபடுத்த தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை 2026 அக்டோபர் முதல் முதற்கட்டமாக 6 மாதங்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் சுமார் 3.5 கோடி குறைந்த மின்னழுத்த மின் இணைப்புகள் உள்ளன; இதில் சுமார் 2.5 கோடி வீட்டு இணைப்புகள். மீட்டர் ரீடிங் பணிக்கான 7,565 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 3,063 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், 4,502 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய முறையில் நியமிக்கப்படும் ஒப்பந்தப் பணியாளர்கள் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மொபைல் செயலி, ஆப்டிகல் புரோப் அல்லது புளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி நுகர்வோரின் இடத்திற்கே சென்று உண்மையான மீட்டர் அளவைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு பணியாளர் நாளொன்றுக்கு 250 மின் இணைப்புகள், பிற மாநகராட்சிகளில் 220, நகராட்சிகளில் 200, பேரூராட்சிகளில் 180, கிராமப்புறங்களில் 110, மலைப்பகுதிகளில் 80 இணைப்புகளில் ரீடிங் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மீட்டர் ரீடிங் தாமதம் காரணமாக மின் பயன்பாடு அதிக கட்டணப் பிரிவுக்குச் சென்று கட்டணம் அதிகரிப்பதாக எழுந்த புகார்களையும், பணியாளர் பற்றாக்குறையையும் சமாளிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிரந்தர காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக தனியாரிடம் பணியை ஒப்படைப்பதற்கு சில தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.













