பாலாஜி இயக்கத்தில் அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பும், சக்தி பாலாஜி இசையும் அமைத்துள்ளனர்.
சிறு முதலீட்டில் உருவான இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சினிமாவை நம்பினால் அது கைவிடாது: நடிகர் சித்து
நடிகர் சித்து பேசுகையில், “இந்தத் தருணத்திற்காக 14 ஆண்டுகள் காத்திருந்தேன். சினிமா வாய்ப்புக்காக பல இடங்களில் அலைந்து, பசி, அவமானம் என பல சிரமங்களை சந்தித்தேன். எனக்கான வாய்ப்பு எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் இருந்த நாட்கள் ஏராளம்.
இன்று நான் நடித்த படம் பல ஊர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ, அது நம்மைக் கைவிடாது என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இது எனக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் பாலாஜி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.

‘தி டார்க் ஹெவன்’ என் முதல் படம் என்பதில் பெருமை: நடிகை தர்ஷிகா
நடிகை தர்ஷிகா பேசுகையில், “வேர்ட் ஆப் மௌத் என்பதற்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால், பலரும் படத்தைப் பார்க்க வந்துள்ளனர். அதற்காக அனைவருக்கும் நன்றி.
பொதுவாக முதல் படம் என்றால், பல ஆண்டுகள் கழித்தும் பெருமையாக சொல்ல வேண்டும். அந்த வகையில் ‘தி டார்க் ஹெவன்’ படத்தை என் முதல் படம் என்று பெருமையாகச் சொல்வேன்” என்றார்.
இந் நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிப்புக் கலைஞர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஆர்த்தி, சுமித்ரா, பிரதீப், விவேக், செல்வா, மனோஜ், அலெக்ஸ், டேனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.





















